Crime: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க வேண்டுமா..? மும்பை பெண்ணிடம் ஆசைக்காட்டி காசு கறந்த கும்பல்..
மும்பையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் ஜெயிலர் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி இருவர் 10 லட்சம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த 21 வயது பெண்ணிடம் ஜெயிலர் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி இருவர் 10 லட்சம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சேர்ந்த 21 வயதான நிலேஷா என்ற பெண்ணுக்கு நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இவரை தொடர்பு கொண்ட பியூஸ் ஜெயின், மந்தன் ருபெரல் என்ற இருவர், தாங்கள் ஹைதரபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தங்களது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்கள் வெளிவந்துள்ளது என்றும், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ’ஜெயிலர்’ மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.சி- 15 ஆகிய படங்களை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணிடம் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு தருகிறோம். இரண்டு வேடங்கள் உள்ளது. அதில் ஒன்று ரஜினிகாந்த் மகள் வேடம் அல்லது சைபர் ஹேக்கர் வேடம் இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் நம்பி அந்த பெண் தொடர்ந்து தனது முழுவிவரம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து படத்தில் நடிக்க தாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக நிலேஷாவிடம் தெரிவித்து அதற்கான போலி ஆவணத்தையும் கொடுத்துள்ளனர். மேலும், போனில் அப்பெண்ணிடம் பேசி படத்தில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கி, பாஸ்போர்ட், அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக சிறிது பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை கறந்துள்ளனர்.
போதிய பணம் கிடைத்தவுடன் அந்த இரண்டு பேரும் தலைமறைவாகியுள்ளனர். நிலோசாவும் அந்த இருவரை தொடர்புகொள்ள முயற்சித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நிலோசா மும்பை தகிசர் காவல்நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2003 ம் ஆண்டு வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் படத்தயாரிப்பு கம்பெனி அரசால் பதிவு செய்யப்பட்டு இதுவரை பல தெலுங்குப் படங்களை தயாரித்து இருக்கிறது. ஆனால், இதன் உரிமையாளர்கள் இவர்கள்தான் என்று இதுவரை உறுதியாகவில்லை. இருப்பினும் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.