PUBG | பப்ஜி விளையாட்டு.. அம்மாவின் அக்கவுண்டில் ரூ.10 லட்சத்தை காலி செய்த மகன்.!
பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டினால் இளைஞர்கள் பலர் பணத்தினை இழப்பதோடு, பலர் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்கும் அபயாம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் பப்ஜி ஆன்லைன் கேம் விளையாடிய போது தாயின் அக்கவுண்டிலிருந்து ரூபாய் 10 லட்சத்தை இழந்த சிறுவன் மாயமான விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் முன்பெல்லாம் போதைப்பழக்கத்தினால் சீரழிந்து வந்தது. ஆனால் மாறிவரும் காலநிலைச்சூழல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் எல்லாம் வேறு வழியில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ப்ளுவேல் என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு குழந்தைகள் பலர் பலியான நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் காலச்சூழல் தான் மாறிவருகிறது அல்லவா? தற்போது அதேப்போன்று பப்ஜி என்ற மற்றொரு ஆன்லைன் விளையாட்டினால் இளைஞர்கள் பலர் பணத்தினை இழப்பதோடு, மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தான் இந்த விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தடையை மீறி பப்ஜி விளையாட்டினைப் பலர் விளையாடி வருகின்றனர். இப்படித்தான் மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச்சேர்ந்த 16 வயது சிறுவன் பப்ஜி விளையாடியதைக் கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் கோபத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டினை விட்டு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்றிருக்கிறார். இதனையடுத்து அச்சிறுவனில் பெற்றோர் தங்களின் குழந்தைக் காணாமல் போய்விட்டதாகப் புகார் அளித்தனர். இந்த வழக்கில் சிறுவன் மைனர் என்பதால் போலீசார் பெற்றோரின் புகாரினை கடத்தல் வழக்காகப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தான் போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் காணாமல் போனதாக கூறப்படும் 16 வயது சிறுவன், பப்ஜி விளையாடி தன்னுடைய தாயின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூபாய் 10 லட்சத்தை இழந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனையைப் பற்றி பெற்றோர் அறிந்து அச்சிறுவனைக் கண்டித்தப்போது தான், சிறுவன் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டான் என்று போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இதனையடுத்து தொழில்நுட்ப பகுப்பாய்வின் உதவியுடன், மும்பை குற்றப்பிரிவு போலீசார் காணமால் போன சிறுவனைக்கண்டுபிடிக்க முயற்சிவந்தனர். அப்போது தான் அச்சிறுவன் அந்தேரி கிழக்கு மகாகாளி குகை அருகே சிறுவன் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. .இதனையடுத்து அந்தேரி பகுதிக்கு உடனடியாக விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டதோடு ஆன்லைன் விளையாட்டினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து கவுன்சிலிங் கொடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோர்கள் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இன்றைய சூழலில் 2 வயதில் இருந்தே குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை கையாள்கின்றனர். மேலும் கொரோனா தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளும் மொபைல் போன்களை தான் குழந்தைகள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்தளவிற்கு சுதந்திரம் கொடுக்கிறோமோ? அந்தளவிற்கு அவர்கள் நல்ல வழியில் தான் செல்கிறார்களா? என்பதை கண்காணித்துக்கொள்வது அவசியமான ஒன்று. மேலும் இந்த இயந்திர உலகத்தில் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் எனவும் குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.