(Source: ECI/ABP News/ABP Majha)
Mumbai Rape | வாகனத்துக்குள் பாலியல் வன்கொடுமை.. சிதைக்கப்பட்ட பிறப்புறுப்பு.. மும்பையில் ஒரு நிர்பயா!
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்தது போல் கொடூரம் மும்பையில் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்தது போல் கொடூரம் மும்பையில் பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2012 ஆம் டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவம் பயின்ற மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு சாலையில் வீசி எறியப்பட்ட சம்பவம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த நாட்டையும் அதிரச் செய்தது. நிர்பயா உயிரிழந்தார். இந்த வன்கொடுமையைச் செய்தவர்களில் ஒருவர் சிறுவன், மற்ற ஐவரில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நிர்பயா வன்கொடுமைக்குப் பின்னர் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் வன்கொடுமைகள் முடிந்தபாடில்லை. தூக்கு தண்டனை எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தியாகத் தெரியவில்லை. ஹைதராபாத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவமாக இருக்கட்டும், காஷ்மீரில் கத்துவா சிறுமிக்கு நேர்ந்த கொடூரமாக இருக்கட்டும் நிர்பயாக்களை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன. ஹர்த்ராஸ், உனாவோ என்று வன்கொடுமைகளின் களம் மட்டும் தான் மாறியுள்ளது.
அப்படி ஒரு சம்பவம் நேற்று மும்பையில் நடந்துள்ளது. மும்பை கைரானி சாலையில் ஆண் ஒருவர் பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசியில் தகவல் வந்தது.
தகவல் வந்ததும் போலீஸார் கைரானி பகுதிக்கு விரைந்தனர். அங்கே ஒரு டெம்போ வாகனம் அருகே இளம் பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு உடனடியாக ராஜாவாடி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு 34 வயது என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது பிறப்புறப்பு இரும்புக் கம்பியால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். கேட்பதற்கே அதிர்ச்சியான அந்தக் குற்றத்தைச் செய்த மோகன் சவுகான் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். அந்த நபரின் மீது இபிகோ 307ன் கீழ் கொலை முயற்சி வழக்கு, இபிகோ 376ன் கீழ் பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் டெம்போ வேனை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். வேனில் ரத்தக் கறைகள் உள்ளன. வேனை தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிர்பயா சம்பவத்துக்குப் பின்னர், குற்றவியல் சட்ட திருத்த மசோதா (2018) மூலம் மரண தண்டனையின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பின்னர், 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் மரண தண்டனைக்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.