”ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” - மனைவிகளை சமாளிக்க கணவனின் செய்த வேலை.. ஃப்ளாப்பான ப்ளான்..
அந்த திட்டம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து மும்பை கல்யாண் நகர் பகுதி போலீசார் அவர் மீது தற்போது போலி கடத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் கல்யாண் நகரைச் சேர்ந்த ஒருவர் தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தானே தன்னை கடத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது இரண்டு மனைவிகளை சமாளிக்க தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தன்னைத் தானே கடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்த திட்டம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து மும்பை கல்யாண் நகர் பகுதி போலீசார் அவர் மீது தற்போது போலி கடத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்த அவர் தனது மனைவிகள் தன்னை நன்றாக நடத்தவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் இருக்கும் அவரது நண்பரின் வீட்டில் அவர் மறைந்திருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சுனிதா கெய்க்வாட் என்பவர் கடந்த அக்டோபர் 14 அன்று கோல்சேவாடி காவல் நிலையத்திற்குச் சென்று தனது கணவர் சந்தீப் கெய்க்வாட் என்பவரை கும்பல் ஒன்று கடத்தியதாக வழக்குப் பதிவு செய்தார். அவரது புகாரில் அவர் குறிப்பிட்ட தகவலின்படி கணவன் மனைவி இருவரும் தங்கள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சாலையில் நின்று ஒருவருக்கொருவர் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கல்யாண் கிழக்கு பகுதி ஜேபி சாலையில் உள்ள சத்கர் டவர் அருகிலிருந்து ஒரு ஆட்டோரிக்ஷாவில் வந்த மூன்று பேர் அவர்களிடம் சென்று சந்தீப்பை அடித்துவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர்
கூடுதல் தகவலாக சுனிதா சந்தீப்பின் இரண்டாவது மனைவி, இருப்பினும் அவர் தனது முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இதற்கிடையேதான் கணவன் மற்றும் மனைவிகளுக்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது.
புகாரை அடுத்து கடத்தல் வழக்கு பதிவு செய்து கோல்சேவாடி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ மற்றும் அதன் டிரைவரை கண்டுபிடித்தனர். அவர்கள் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் ஆகிய மூன்று பேர் எனக் கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தனது வாகனத்தை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆட்டோ டிரைவர் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டதன்படி அவர்கள் சந்தீப்பை அடித்து, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளனர். பின்னர் கடத்தப்பட்ட நபர், அங்கிருந்து நண்பர்களில் ஒருவரின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றுள்ளார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை அடுத்து இது போலி கடத்தல் வழக்கு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதை அடுத்து 18 அக்டோபர் அன்று உல்லாஸ்நகரில் உள்ள வால்துனி என்ற இடத்தில் இருந்து ஜாவேதை போலீசார் கைது செய்தனர், அதன்பிறகு அவர் இது போலி கடத்தல் என ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. மேலும் தனது கடத்தலை தனது மாமியாரின் மீது பழிபோடச் சொல்லி கெய்க்வாட் தங்களிடம் சொன்னதாகவும் இதனால் இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் பிறக்கும் என அவர் எண்ணியதாகவும் தெரிகிறது. கெய்க்வாட்டின் முதல் மனைவி அவரோடு இணைந்து வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்காவா போட்ட ப்ளான் சுக்காவான வருத்தத்தில் தற்போது கெய்க்வாட் சிறையில் உள்ளார்.