கிளாம்பாக்கம் To ஸ்ரீலங்கா.. சுத்து போட்டு பிடித்த என்சிபி.. ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் சிக்கியது
Methamphetamine drug சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரெட் ஹில்ஸ் பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சமீப காலமாக நாடு முழுக்க போதை பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து போதை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரகசிய தகவல்
இந்நிலையில், சென்னையில் சுமார் 6.92 கிலோ மதிப்புடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக என்சிபி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை மண்டல என்சிபி ( NCB ) அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அந்த நபர் முன்னுக்குப் பிரதான தகவல்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த நபரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் சுமார் 5.970 கிலோ எடை உள்ள மெத்தபெட்டமைன் என்ற கொடிய வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கடந்த 24ஆம் தேதி சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் என்சிபி அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர். என்சிபி அதிகாரிகள் நடத்திய விசாரணை பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. எந்த பகுதியில் இருந்து மெத்தம்பெட்டமைன் போதை பொருள் கடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்தனர். விசாரணை அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் ரெட்டில்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைக்கும் குடோனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனை எடுத்து கடந்த 27ஆம் தேதி என்சிபி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், 954 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் 7 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். என்சிபி அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் 70 கோடி என கணிக்கப்பட்டுள்ளது
இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட நபர்கள் சில மாதங்களாக இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக, என்சிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மெத்தம்பெட்டமைன் என்ற கொடிய போதை பொருளை ராமநாதபுரம் வழியாக ஸ்ரீலங்காவிற்கு கடத்த முயற்சி மேற்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது
மெத்தபெட்டமைன் என்றால் என்ன ?
மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்பது ஐஸ் என்னும் போதை பொருளாக பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் இந்த போதை பொருள் பார்ப்பதற்கே, உறைந்த வெள்ளை நிற ஐஸ்கட்டி போல் காட்சியளிக்கும். இந்த போதை பொருள் முழுமையாக 100% செயற்கை முறையில் தயாரிக்கப்படும் போதைப் பொருளாக உள்ளது.
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் போதை பொருள் என்பதால் இதன் வீரியமும், அதிகளவு உள்ளது. ஒரு முறை மட்டுமே இந்த போதை பொருளை பயன்படுத்தினால் போதும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் அதற்கு எளிதாக அடிமையாகி விடுவார். இது அதிக அளவு எடுத்துக் கொண்டால் கோமா நிலைக்கு சென்று மரணத்தையும் ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இது எந்தவித சுவையும் இருக்காது என்பதால் , வேறு பொருட்களில் சேர்த்து கடத்தி சென்றார் இதை கண்டுபிடிப்பதும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.