காதலியால் ஏமாற்றம், உதவி ஆய்வாளர் மிரட்டல்: குவைத்தில் இளைஞர் தற்கொலை! மயிலாடுதுறை பரபரப்பு
காவல் உதவி ஆய்வாளருடன் சேர்ந்து காதலி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இளைஞர் குவைத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலி வேறொருவரைத் திருமணம் செய்யவிருப்பதாகவும், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறி, தொலைபேசியில் பெற்றோரிடம் தெரிவித்த சில மணிநேரங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காதல் கதை தொடங்கியது எப்படி?
மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் ஒரே மகன் 30 வயதான சரத்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை சரத்குமார் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சரத்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், அடிக்கடி சங்கீதாவுக்கு ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அனுப்பியுள்ளார். இதுவரை 15 சவரன் நகைகள் மற்றும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை ரொக்கப் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் இந்த உறவு நீடித்துள்ளது.
சம்பவத்தின் திருப்புமுனை: உதவி ஆய்வாளரின் தலையீடு
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சங்கீதாவின் இருசக்கர வாகனம் தொலைந்த நிலையில், இதுகுறித்து புகார் அளிக்க வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சங்கீதாவும் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தியும் வெளிநாட்டில் இருந்த சரத்குமாருக்கு வீடியோ கால் செய்துள்ளனர். அப்போது, "நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே" என்று கூறியுள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி, சரத்குமாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சரத்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சோகமான முடிவு
நேற்று இரவு, சரத்குமார் தனது பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, சங்கீதா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இனி உயிர் வாழ விருப்பமில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். அதற்குப் பிறகு அவரது தொலைபேசியை அணைத்து வைத்துள்ளார். பெற்றோர்கள் தொடர்ந்து தொடர்புகொள்ள முயன்றபோது, அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், குவைத்தில் உள்ள சரத்குமாரின் நண்பர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்கள், சரத்குமார் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்தச் செய்தி சரத்குமாரின் குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியது.
உறவினர்கள் நீதிகேட்டுப் போராட்டம்
சம்பவத்தைக் கேள்விப்பட்ட சரத்குமாரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், சரத்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் புகார் மனு அளித்தனர். மேலும், குவைத்தில் உள்ள சரத்குமாரின் உடலை உடனடியாக இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





















