வட மாநில தொழிலாளரின் 1 லட்சம் ரூபாய் திருட்டு - சீர்காழியில் சோகம்
சீர்காழியில் அரிவாள், கோடாலி செய்யும் வட மாநில தொழிலாளர் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய சென்ற அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான வினோத். இவர் தனது உறவினர்களுடன் ஆண்டில் 5 மாதம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்து சாலையோரம் தங்கி, பட்டறை அமைத்து அரிவாள், மண்வெட்டி, கோடாலி அரிவாள்மனை ஆகியவை செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் வினோத் மற்றும் அவரது உறவினர்கள் தங்கி அரிவாள், கோடாலி, மண்வெட்டி ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மூலப் பொருட்கள் வாங்குவது மற்றும் உணவு செலவு போக மீதமுள்ள பணத்தை சேமித்து கைப்பை ஒன்றில் வைத்து வினோத் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் மரத்தடியில் பணத்தை பாதுகாப்பாக தனது அருகில் வைத்துக் கொண்டு வினோத் தூங்கி உள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த வேலிக்கு மறுபுறம் பணப்பை கிடந்துள்ளது, அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் பதறி போய் கை பையை எடுத்துப் பார்த்தபோது அதில் இருந்த 1 லட்சம் ரூபாய் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இவர் தூங்கிய போது அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு கை பையை போட்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வினோத் மற்றும் அவரது உறவினர்கள் சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநிலத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான தூரம் கடந்து கடின உழைப்பால் சேமித்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பு சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.