மயிலாடுதுறையில் சோகம்; மண் சரிந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
தரங்கம்பாடி அருகே மகிமலையாற்றில் சட்ரஸ் கட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் காவிரி ஆற்றின் கடைமடை மாவட்டமாக இருந்தது வருகிறது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக ஜுன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். அப்போது திறக்கும் நீரானது, விவசாயத்திற்கு தங்கு தடையின்றி சென்றடையும் நோக்கில், ஆண்டுதோறும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், நீர் சட்ரஸ்கள், மதகுகள், பாலங்கள் சரி செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறான பணிகள் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
வடமாநில தொழிலாளிகள்
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கண்ணப்பன் மூளை என்ற இடத்தில் உள்ள மகிமலை ஆற்றில் சட்ரஸ் (நீரொழுங்கி) அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 21 -ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. 15 நபர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த தனியார் இன்ஜினியர் அருண்ராம் முன்னிலையில் வெஸ்ட் பெங்காலை சேர்ந்த சௌரவ் கங்குலி, ராகுல் மேஸ்ட்ரி, பாகர் அலி, சுமர் அலி, ஆகிய நான்கு பேர் ஆற்றின் கீழே இறங்கி சட்ரஸ் சுவர் எழுப்ப ஆங்கில் மற்றும் இரும்பு தகரம் கொண்டு சென்ட்ரிங் அடிக்கும் பணியை செய்து வந்தனர்.
Chithra Pournami : பக்தர்களே! சித்ரா பௌர்ணமி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு விளக்கம்
சரிந்த மணல் - ஒருவர் பலி
அப்போது எதிர்பாராத விதமாக மேலிருந்து மண் சரிந்து விழுந்தது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தெற்கு பர்குநாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமர்அலி சிக்கி கழுத்து மற்றும் முகத்தில் சென்ட்ரிங் இரும்பு பலகை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர்த்தப்பினர். இச்சம்பவம் அறிந்த அந்த பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த சுமர் அலி உடலை கைப்பற்றி பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுமர் அலியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரிய பாதுகாப்பு இன்றி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள்.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இப்பகுதியில் நடைபெறும் அரசு சார்ந்த பணிகளில் தற்போது பெருமளவு வெளிமாநில தொழிலாளிகளே அதிகளவில் பணியமர்த்தபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழி முறைகள் பின்பற்றாமல் பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். இதனால் அவ்வபோது சில உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஆனால் இவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் என்பதால் இவர்களுக்காக யாரும் குரல் கொடுக்க முன் வராததால், சிறு நிவாரண தொகை கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க அரசு வெளிமாநில தொழிலாளர்களை உரிய முறையில் வரையறை செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.