எனக்கு ஏடிஎஸ்பி வரை லிங் உண்டு - மிரட்டல் விடுத்த காவலர் பணியிடை நீக்கம்
சீர்காழி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பணம் கேட்டு மிரட்டிய காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் பகுதியில் சாலையோரம் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பிரதான சாலையான சிதம்பரம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் செல்ல முயன்ற போது பின்னால் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த மங்கைமடம் காந்திநகரை சேர்ந்த பிரவீன்ராஜ் என்பவர் சங்கர் வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதனை அடுத்து கீழே விழுந்த பிரவீன் ராஜிக்கு முதலுதவி செய்ததுடன், வாகனத்தின் உடைந்த பாகங்களையும் சீர் செய்து கொடுக்க சங்கர் முன்வந்துள்ளார்.
ஆனால், பிரவீன் ராஜ் இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைத்து அவரது வாகனத்தில் விபத்துக்கு முன் என்னென்ன மாற்ற செய்து சரி செய்ய வேண்டுமோ அனைத்தையும் சேர்த்து மாற்ற திட்டமிட்டுளார். இதனை அறிந்த சங்கர் என்னால் வாகனத்திற்கு எவ்வித செலவு செய்ய முடியாது. வேண்டுமென்றால் காவல் நிலையத்தில் புகார் அளித்துக் கொள்வோம் என பேசி முடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து சீர்காழி காவல்நிலைய எல்லையில் நடைபெற்ற விபத்து குறித்து சீர்காழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரவீன் ராஜ் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பிரபாகரன் என்பவரிடம் விபத்து குறித்து தெரிவித்துள்ளார். உடனே காவலர் பிரபாகரன் சங்கரைத் தொடர்பு கொண்டு பிரவீன்ராஜிக்கு ஆதரவாக உடனே பணம் வழங்க வேண்டும், உன்னை கைது செய்ய சொல்லி சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார், மேலும் எனக்கு ஏ.டி.எஸ்.பி வரை லிங்க் உள்ளது. ஏற்கனவே இது போன்ற விபத்தில் ஒரு லட்சம் வரை பணம் பெற்று கொடுத்துள்ளேன். எனவே, உடனடியாக பணத்தை கொடுக்க வேண்டுமென மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி ஆடியோ பதிவை சங்கருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
மேலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு இரு சக்கர வாகனத்துக்கு உதிரிபாகம் வாங்கியதாக ஒரு ரசீது அனுப்பி வைத்து, தொடர்ந்து காவலர் பிரபாகரன் சங்கருக்கு போன் செய்து பணம் குறித்து கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த சங்கர், காவலர் பிரபாகரனின் மிரட்டல் ஆடியோ குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அந்த ஆடியோ பதிவை அனுப்பி வைத்தார். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உயர் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்ட காவலர் பிரபாகரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி காவல் நிலையத்தில் உள்ள வழக்கில் புதுப்பட்டினம் காவலர் பிரபாகரன் அத்து மீறி தலையிட்டு உயர் அதிகாரிகள் பெயரை சொல்லி மிரட்டல் விடுத்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார், உதவி சிறப்பு ஆய்வாளர் மோகன் ஆகிய இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.