மயிலாடுதுறையில் மணல் மாஃபியாக்கள் ஆதிக்கம் - தினமும் 2 லட்சம் வரை கல்லாகட்டுவதாக போலீஸ் மீது புகார்
மணல்மேடு காவல்துறையினர் மணல் மாஃபியாக்களிடம் பணம் பெற்று கொண்டு ஆற்று மணல் கடத்தலுக்கு துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கட்டிட வேலைகளுக்கு மணல் இன்றி அதற்கு மாற்றாக எம் சாண்ட் பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த போதிலும் மணலுக்கு மாற்று இடத்தை எம் சாண்ட் மணலுடன் ஒப்பிடுகையில் தரம் குறைவு என கருதப்படுவதால் பலரும் ஆற்று மணலை அதிக விலை கொடுத்து வாங்கி வீடுகள் கட்ட முற்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மணல் மாஃபியாக்கள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க பல காவல்துறையினர் கனிமவள அதிகாரிகள் என பலரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் ஒரு சில காவல் அதிகாரிகள் பணத்திற்காக கனிமவள கொள்ளையான மணல் மாஃபியாக்களுக்கு துணை போவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து அப்பகுதி சமுக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தமிழ்நாடில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த உடன் கொங்கு மண்டலத்தில் லஞ்ச லாவண்யத்தில் புரையோடிப்போன சில காவல் ஆய்வாளர்களை தமிழ்நாடு முழுவதும் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டது புதிய அரசு, அதில் ஒருவர்தான் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக வந்த கல்லா கட்டும் ஜீவராஜா மணிகண்டன் என்பவர். தற்போது புதிய மாவட்டத்தில் நேர்மையான அதிகாரியாக உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மயிலாடுதுறை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களது பார்வைக்கு நேர்மையாக உள்ளது போல் கட்டிக்கொண்டு பெயர் அளவில் சிறு சிறு வழக்குகளை பதிவு செய்து அவர்களது கண்களில் மணலை தூவி மணல் மாஃபியாக்கள் உடன் கைகோர்த்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு நாளொன்றுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் வரை கல்லா கட்டுகிறார்.
குறிப்பாக மணல்மேடு காவல் எல்லைக்குட்பட்ட சித்தமல்லி, குறிச்சி, ராஜசூரியன்பேட்டை, பாப்பாக்குடி, முடிகண்டநல்லூர், சீபுலியூர், கடலங்குடி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய ஏழு இடங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 5 மணி வரை கொள்ளிடம் ஆற்றில் 50 க்கும் மேற்பட்ட டிராக்டர், லாரி ,மாட்டுவண்டி அகிய வாகனங்களின் மூலமாக சட்டத்திற்கு முரணாக மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் மாஃபியாக்கள் கல்லா கட்டும் ஆய்வாளர் ஜீவராஜா மணிகண்டனுக்கு டிராக்டரில் மணல் கடத்துவதற்கு ஒரு வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாயும், லாரியில் மணல் கடத்துவதற்கு ஒரு வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், மாட்டு வண்டியில் மணல் கடத்துவதற்கு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் மாமூலாக கொடுத்துவிட வேண்டும் இந்த மாமூலை ஆய்வாளரின் விசுவாசிகளாக உள்ள திருவாரூரை பூர்வமாக கொண்ட முதல் நிலை காவலர் சரவணகுமார் தலைமை காவலர் கலையரசன் ஆகிய இருவரும் அதிகாலையே வசூலித்து ஆய்வாளரின் கல்லாவை நிரப்ப செய்வதாகவும், மேலும் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரியபடுத்த வேண்டிய தனிப்பிரிவு ஏட்டு நாராயணசாமி இவர்களுடன் கைகோர்த்து மணல் கொல்லையில் ஈடுபடுகின்றனர் என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், நள்ளிரவில் உறக்கமின்றி வாகன இரைச்சலால் உறக்க இன்றி தவிப்பதாவும், இதுபோன்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்றுள்ளது எங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என்றும், இது குறித்து கேள்வி எழுப்பும் ஒரு சிலரையும் அவர்கள் பல்வேறு வழிகளில் சரிகட்டி விடுவதாகவும்.
மக்களுக்கு மக்கள் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டிய காவல் துறையினர் இதுபோன்ற மணல் மாஃபியாக்கள் உடன் கைகோர்த்து கல்லா கட்டும் மணல்மேடு காவல் ஆய்வாளர் ஜீவராஜா மணிகண்டனை மத்திய மண்டல காவல்துறை தலைவர் மணல் கொள்ளையினை விழுப்புரம் சரகத்தில் சீர் செய்தது போன்று மணல் கொள்ளையில் ஈடுபடும் இந்த காவல் ஆய்வாளரை நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது இந்த தகவல் புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்று இதுபோன்ற சட்ட விரோதமாக கனிமவள கொள்ளையில் ஈடுபடும், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.