சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி - மயிலாடுதுறையில் பரபரப்பு
வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்திக் கூறி ஏமாற்றும் சம்பவம் காலங்காலமாக தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்டோரிடம் 3 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருத்தணி முருகன் என்பவரது மனைவி கவிதா என்பவர் கடந்த 2017 -ஆம் ஆண்டு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 2 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இதுநாள் வரை வேலை வாங்கி தராததோடு, பணம் கொடுத்தவர்களிடம் பணத்தையும் திரும்ப தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பலமுறை கவிதாவிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்களை கவிதாவின் மகன் எழிலரசன் மற்றும் அவரது கணவர் திருத்தணி முருகன் ஆகிய இருவரும் கொலை மிரட்டல் விடுவதாகவும், 3 பேரும் சேர்ந்து 100 -க்கும் மேற்பட்டவர்களிடம் கோடி கணக்கில் பணமோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து, சீர்காழி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என கூறி, பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்து தங்கள் பணத்தை மீட்டு தர கோரிக்கை விடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஏராளமானோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்திக் கூறி ஏமாற்றும் சம்பவம் காலங்காலமாக தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
பொதுமக்கள் இது போன்ற ஆசை வார்த்தைகளுக்கு மதி மயங்காமல், நேர்மையான வழியில் வேலையினை பெற முயற்சிக்க வேண்டும், அதனைத் தவிர்த்து வேலை கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் ஏமாற்று காரர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் எனவும், பின்பு பணத்தை இழந்து புலம்பி பயனில்லை என்றும், இது போன்ற ஏமாற்றுக் காடுகளில் இருந்து காவல்துறையினர் பொதுமக்களே காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.