மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் வேலை செய்த பெண் மர்ம மரணம்
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை செய்த பெண், பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மயிலாடுதுறை தாலுக்கா, மண்ணிப்பள்ளம், மேலத்தெருவில் வசிக்கும் மகாலிங்கம் என்பவரது 45 வயதான மனைவி கிரிஜா உதவியாளராக பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி உதவியாளராக பணியாற்றும் அவரை, பள்ளியில் அருகில் உள்ள வயலில் ஆடு மேய்க்கும் வேலைக்கும் பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தினமும் அவரது வீட்டிலிருந்து, பள்ளி பேருந்திலேயே பள்ளிக்கு வந்து சென்ற அவரை, கடந்த சில நாட்களாக வீட்டிற்கு அருகே பேருந்து சென்று வீட்டிலிருந்து அவரை அழைத்து வராமல் வழக்கத்திற்கு மாறாக 3 கி.மீ தூரம் நடக்க வைத்து பேருந்தில் அழைத்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று, பள்ளிக்கு வந்த அவர் சில மணி நேரத்தில், உடல்நிலை சரியில்லை என, அவரது மகள் கீர்த்தனாவுக்கு தொலைபேசியில் செய்தி சொல்லி, அரசு மருத்துவமனைக்கு வர சொல்லியுள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் கீர்த்தனா மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு வந்து, தாய் எங்கே என்று கேட்ட போது பதில் கூறாமல் அலைகழித்துள்ளனர். அப்போது, மருத்துவமனை ஊழியர் அவர் இறந்து பல மணிநேரம் ஆகி விட்டதாகவும், சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத மகள் கீர்த்தனா எந்தவித நோயும் தனது தாய்க்கு இல்லை, பள்ளி நிர்வாகம் ஏதோ செய்து உள்ளது, அதனால்தான் என் தாய் இறந்து இருப்பார் என காவல்துறையில் குற்றம் சுமத்தி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம், மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை செய்து மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து உள்ளார். தனியார் பள்ளி பணியாளர்கள் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் முதலமைச்சரின் காலை உணவுதிட்ட மைய சமையல் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் உணவுகளின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டமங்கலம் நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடம் உள்ளது. இங்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குநருமான திருமதி.வி.அமுதவள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவு பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரமாக தயாரிக்கும் விதம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் சணல்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.