மயிலாடுதுறையில் பயங்கரம்.. இளைஞர் வெட்டி படுகொலை.. சாராய வியாபாரிகளின் வெறிச்செயல்
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வந்த சாராய விற்பனை
மயிலாடுதுறை அருகே முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். அதனை தட்டி கேட்பவர்களை சாராய வியாபாரிகள் அடித்தும், கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றுள்ளது. அதில் சாராயவியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

சாராய விற்பனையை தட்டி கேட்ட இருவர் கொலை
இந்த சூழலில் தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் என்பவரது மகன் பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்த இளைஞர் 25 வயதான ஹரிஷ் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் 20 வயதான ஹரிசக்தி ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு, சராமாரியாக கத்தியால் குத்தியுளாளனர். இதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வந்தனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகள் கைது
இந்நிலையில் முன்னதாக தலைமறைவாக இருந்த ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மூவேந்தனை தேடி வந்த நிலையில் மூவேந்தனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது வேண்டும், மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் உறவினர்கள் நேற்று நள்ளிரவு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர்.





















