பெண் துணையுடன் நள்ளிரவில் அரங்கேறிய திருட்டு - CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பு, எவ்வளவு கொள்ளை தெரியுமா?
மயிலாடுதுறை அருகே பெண் உதவியுடன் கோயில் உண்டியல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமக் கோயிலில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், ஒரு பெண்ணின் துணையுடன் உண்டியலைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய குடமுழுக்கு நடைபெற்ற கோயில்
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் வடக்கு வீதி, தட்டாரத் தெருவில், பீடை அபகாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோயிலின் உண்டியல் திறக்கப்படவில்லை. இதனால், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணம் உண்டியலில் கணிசமான அளவில் சேர்ந்திருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்
இந்நிலையில் நேற்று நள்ளிரவு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஒரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் அந்தக் கோயிலின் வாசலுக்கு வந்துள்ளார். முதலில், அந்த நபர் வாகனத்திலிருந்து இறங்கி, தன்னுடன் வந்த பெண்ணை கோயில் வாசலில் காவலுக்கு நிற்கும்படி செய்கிறார். அந்தப் பெண் சுற்றி யாரும் வருகிறார்களா என நோட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், அந்த நபர் சிறிது நேரம் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களின் நிலையை உன்னிப்பாகக் கவனித்துள்ளார். பின்னர், தான் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கட்டர் கருவியைப் பயன்படுத்தி, ஒருசில நிமிடங்களில் கோயில் உண்டியலின் இரும்புக் கம்பிகளை அறுக்கிறார்.

சிறு உண்டியலானதால், அதனை எளிதாக அறுத்து எடுத்து, அருகில் காத்திருந்த பெண்ணிடம் அதனை எடுத்துத் தருகிறார். அந்தப் பெண் உண்டியலை ஒரு துணியில் மறைத்து வைத்துக் கொண்டு, இருவரும் அங்கிருந்து அவசரமாக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
உண்டியல் மதிப்பு மற்றும் காவல்நிலையத்தில் புகார்
கோயில் நிர்வாகிகள் கொடுத்த தகவலின்படி, நான்கு மாதங்களாகத் திறக்கப்படாத உண்டியலில் சுமார் ரூ.50,000 வரை காணிக்கையாகச் சேர்ந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் உண்டியலைத் திருட ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிராமக் கோயில்கள், சிறிய வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால், இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், காவல்துறை இதுபோன்ற கிராமப்புறக் கோயில்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்வும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.






















