தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் குற்றச்சம்பவங்கள்
தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தேறிய வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
தொடரும் கொள்ளை சம்பவங்கள்
அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் திருட்டு நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கோயில் உண்டியலை உடைத்து 2 லட்சம் ரூபாய் திருட முயன்று மூன்று கொள்ளையர்கள் சிக்கிய நிலையில் அதனை தொடர்ந்து இரண்டு தினங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் பொறியாளர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பரபரப்புகள் அடங்கும் முன்பு மீண்டும் ஒரு வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கொள்ளை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திட சமுத்திரம் ரத்தினாம்பாள் நகரை சேர்ந்தவர் 37 வயதான ரகுராமன். அபுதாபி நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 36 வயதான மனைவி மஞ்சுளா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டில் மகள்களுடன் தங்கி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் சீர்காழி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். பொங்கல் விடுமுறையில் சீர்காழி வீட்டில் தங்கி விட்டு கடந்த 19-ம் தேதி மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவுகள் அழிப்பு
இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு வெளிநாட்டில் உள்ள ரகுராமன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா செயல்படவில்லை என மஞ்சுளாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்க மனைவியிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மஞ்சுளா சீர்காழியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவுகள் திறந்து கிடப்பதையும், சிசிடிவி கேமராக்கள் உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோல்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகைகள், 2 லேப்டாப்புகள், சிசிடிவி கேமரா பதிவு எந்திரம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை
உடனடியாக இதுகுறித்து மஞ்சுளா சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அந்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து 2 தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பொருட்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

