Crime: மாணவிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய பேராசிரியர் - தட்டிக்கேட்ட மாணவருக்கு கத்தி குத்து
சீர்காழியில் அரசு கல்லூரி பேராசிரியர் மாணவியின் செல்போனுக்கு தவறான மெசேஜ் அனுப்பியதை தட்டி கேட்ட மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் இயங்கி வருகிறது. சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி ஆங்கில பேராசிரியர் சத்தியமூர்த்தி என்பவர் மாணவி ஒருவருக்கு செல்போனில் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அக்கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த 19 வயதான திலீப்குமார் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் சத்தியமூர்த்தியின் தூண்டுதலின் பேரில் அடி ஆட்களான கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அருள் அரசனை வைத்து, கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவனை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயம் அடைந்த திலீப்குமாரை அருகில் இருந்த சக மாணவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அருள்அரசன், அருள்செல்வன் ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவான பேராசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பேராசிரியர், அதிமுக திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் சத்தியமூர்த்தி என்பது குறிபிடதக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






















