Crime : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் திட்டமிட்டு கொலை; சிசிடிவியால் சிக்கிய கொலையாளி
வண்டியை மாற்றி எடுத்துக் கொண்டு நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டிக் கொண்டு ஜெகதீஸ்வரி வீட்டிற்கு வந்து கொலை செய்ததும், திருடிய நகையை அடமானத்தில் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. 44 வயதான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மாலை மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து 4.30 மணியளவில் ஜெகதீஸ்வரி வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 28ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு மேலாகியும் ஜெகதீஸ்வரி அழைத்துச் செல்ல வரவில்லை என்பதால், கார்த்திகா வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.
அப்போது வீட்டின் படுக்கை அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெகதீஸ்வரி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி உள்ளிட்ட 5 1/2 சவரண் நகை திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் பந்தயசாலை பகுதியில் சூப் கடை வைத்து நடத்தி வரும் மோகன்ராஜ் (33) என்பவர் அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெகதீஸ்வரி உடன் மோகன்ராஜ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜெகதீஸ்வரியை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் மோகன்ராஜ் வீட்டில் இருந்து புல்லட்டில் கிளம்பிய நிலையில், வரும் வழியில் வண்டியை மாற்றி ஆக்டிவா வண்டியை எடுத்துக் கொண்டு நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டிக் கொண்டு ஜெகதீஸ்வரி வீட்டிற்கு வந்து திட்டமிட்டு கொலை செய்ததும், திருடிய நகையை அடமானத்தில் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதவி ஆணையர் பார்த்திபன், “இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே உதவியது. சேரன் மாநகர், கணபதி, அவினாசி சாலை, பந்தயசாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பின்னோக்கி தொடர்ந்து பார்வையிட்டு வந்தோம். பந்தய சாலையில் இருந்து கிளம்பிய நபர் ஒரு கடையில் கிளவுஸ் வாங்கிக்கொண்டு ரெட் பீல்டு வழியாக வந்து வண்டியில் நம்பர் பிளேட் எண்ணை மாற்றிக் கொண்டும், வண்டியை மாற்றி வந்ததும் தெரியவந்தது. மோகன்ராஜ் மற்றும் உயிரிழந்த ஜெகதீஸ்வரி இவருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்துள்ளனர். ஜெகதீஸ்வரி மற்றவர்களிடம் பேசுவது பிடிக்காத காரணத்தினால் மோகன்ராஜ் கொலை செய்துள்ளார். மோகன்ராஜ் மீது கொலை வழக்கு சேலத்தில் உள்ளது. இவர்களின் தொடர்பு குறித்து யாருக்கும் தெரியவில்லை. கொலைக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் மற்றும் திருடிய நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.