அரசு அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.. நடந்தது என்ன?
சென்னையில் பெண் அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் 51 பவுன் நகையை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் பெண் அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் 51 பவுன் நகையை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கத்தில் வளர்மதி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளர் துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2009-ஆம் ஆண்டு வளர்மதி அண்ணா நகரில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, திருவொற்றியூரைச் சேர்ந்த கணேஷ்குமார் அறிமுகமானார். தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களில் அறிமுகம் செய்து வைத்தால் தொழிலாளர் தொடர்பான வேலைகளை அந்த நிறுவனங்களுக்கு செய்து கொடுத்து வருவாய் ஈட்டி கொள்வேன் என தெரிவித்தார்.
இதன் பிறகு தம்பிபோல அவரை கருதி வந்தேன். இந்நிலையில், வீட்டுக்கடனை அடைப்பதற்காக வெளியில் வாங்கிய ரூ.40 லட்சம் மற்றும் வங்கியில் வாங்கிய கடன் ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.49 லட்சம் கணேஷ் குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன். இதனிடையே, கணேஷ் குமார் வீடு புகுந்து 60 பவுன் நகையையும் எடுத்துச் சென்றுவிட்டார்.
இந்தப் பணத்தையும், நகையையும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பி கேட்டபோது கணேஷ் குமார் அதை வைத்து இடம் மற்றும் வீடு வாங்கிவிட்டேன் என தெரிவித்தார். 6 மாதங்களுக்குள் இந்தப் பணத்தை தந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் திருப்பி தராமல் இது நாள் வரை மோசடியாக ஏமாற்றி வருகிறார். எனவே, கணேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதிகாரி வளர்மதி அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஏமாற்றியது உறுதியானது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளர்மதியின் ரூ.49 லட்சம் பணம் மற்றும் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கணேஷ்குமார் போலீஸ் விசாரணையின்போது ஏற்கனவே 9 பவுன் நகைகளை திருப்பி கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 51 பவுன் நகைகளையும், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவு பேரில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.