மதுரையில் கஞ்சா விற்பனை.. மூவர் கைது.. சொத்துகள் முடக்கம்! - அறிக்கை வெளியிட்ட போலீஸ்!
மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பம் ஒன்றின் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளது தமிழக காவல்துறை.
மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பம் ஒன்றின் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளது தமிழக காவல்துறை. ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், தேனி முதலான மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ள காவல்துறை, தற்போது மதுரையில் நிகழ்ந்திருப்பது இதுவரை காவல்துறை வரலாற்றிலேயே நிகழாதது எனக் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், `தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும் சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாக ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இதற்கு முன் இல்லாத வகையில் பாராட்டப்படும் விதமாக தமிழக காவல்துறையினர் மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.
மதுரையின் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவல்துறை சோதனை செய்ததில் சுமார் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை முடக்கும் விதமாக காவல்துறையினரின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இந்தப் பத்திரிக்கை குறிப்பில், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், `கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றம் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது சமூகத்தின் சீர்கேடாகும். மேற்படி கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொத்துக்களை முற்றிலுமாக முடக்க கடுமையான நடவடிக்கை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றம் சில்லரை வியாபாரிகள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்களின் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.