17 திருட்டுகள்... தில்லாய் சுற்றி வந்த இருவர் கைது; நகை, பணம் பறிமுதல்!
114 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் 300 கிராம், ரூபாய் 2 லட்சம் ரொக்கம், சாம்சங் எல்இடி டிவி 1 மற்றும் அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
![17 திருட்டுகள்... தில்லாய் சுற்றி வந்த இருவர் கைது; நகை, பணம் பறிமுதல்! Madurai police arrest two persons involved in 17 theft cases; Seize jewelry money 17 திருட்டுகள்... தில்லாய் சுற்றி வந்த இருவர் கைது; நகை, பணம் பறிமுதல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/17/6a40a35760124ed2bbc674d7c678d7fd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல வழக்குகளில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வரும் வழக்குகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் ஊமச்சிகுளம் கோட்டத்தில் உள்ள கருப்பாயூரணி எனும் ஊரில் உள்ள சிலைமான் ஒத்தக்கடை காவல் நிலையங்களில் நிறைய கன்னக் களவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதுபோன்ற திருட்டுக்கள் அடிக்கடி இந்த ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பதாக கூறப்பட்டு வந்தது. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். பல திருட்டுக்களை அந்த பகுதியில் நடந்த பிறகும் மீண்டும் மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெறுவது பொதுமக்களை அச்சுறுத்தி இருக்கிறது.
அதன்படி 17 வழக்குகள் அந்த பகுதியில் பதியப்பட்டிருந்தன. ஆனால் எந்த வழக்குகளும் துப்பு கிடைக்காமல் எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே இருந்துள்ளது. எனவே அந்த வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படையினர் தங்களது சீரிய முயற்சியினால் வலை வீசி தேடினர். தேடியதில் மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரின் மகன் 34 வயதாகும் ராமச்சந்திரன் மற்றும் அவரது உறவினரான கருப்பபிள்ளையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 24 வயது மகன் பழனி முருகன் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் காவல்நிலையங்களில் பதிவாகி இருந்த 17 கன்னக் களவு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் மேலும் விசாரணை செய்தபோது போலீசாரிடம் தாங்கள் திருடிய நகை பணங்களை வைத்திருக்கும் இடங்களை கூறியுள்ளனர்.
அவர்கள் கூற்றின்படி அந்த இடங்களுக்கு சென்று பார்த்த போலீசார், அனைத்து நகை பணம் மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அந்த 17 வழக்குகளில் களவுபோன சொத்துக்களான 114 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் 300 கிராம், ரூபாய் 2 லட்சம் ரொக்கம், சாம்சங் எல்இடி டிவி 1 மற்றும் அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு குற்றவாளிகளான ராமச்சந்திரன் மற்றும் பழனிமுருகனையும் போலீசார் நீதிமன்ற காவலில் வைத்தனர். அவர்கள் வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த திருட்டு வழக்கை கண்டுபிடிக்க திறம்பட செயல்பட்ட தனிப் படையினர்களான ஒத்தக்கடை காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக், சிறப்பு சார்பு ஆய்வாளர் பிச்சை பாண்டி, தலைமை காவலர் காந்தி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)