மதுரையில் பரபரப்பு...வழிப்பறி கொள்ளையனை சுட்டுப்பிடித்த போலீஸ்
இருவரையும் சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
மதுரையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., மகளிடம் 3 பவுன் நகையை பறித்துச்சென்ற வழக்கில் அவரை பிடிக்க முயன்ற ஸ்டீபன்ராஜ் 24, தப்பி ஓட முயன்றார். பிடிக்க முயன்ற எஸ்.ஐ., ரஞ்சித்தை கத்தியால் வெட்ட, தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சுட்டதில் ஸ்டீபன்ராஜ் வலது கால் மூட்டுக்கு கீழ் இரு தோட்டாக்கள் பாய்ந்தன.
மதுரை தபால்தந்தி நகர் லதா 44. பைபாஸ் ரோடு பிரபல ஸ்வீட்ஸ் கடை ஊழியர். நவம்பர்-4ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு தபால் தந்தி நகர் ரோடு வழியாக டூவீலரில் சென்றபோது, பின்தொடர்ந்து டூவீலரில் வந்த 2 பேர், நகையை பறித்தனர். டூவீலரில் இருந்து கீழே விழுந்த லதாவை செயினுடன் ரோட்டில் 50 மீட்டர் துாரம் இழுத்துச்சென்று 3 பவுன் செயினை பறித்துச்சென்றனர். லதா ஓய்வுபெற்ற ஆயுதப்படை எஸ்.ஐ.,யின் மகள். இதுதொடர்பாக கூடல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக சம்மட்டிபுரம் ஸ்டீபன்ராஜ் உட்பட இருவரை தேடி வந்தனர். நேற்று மாலை செல்லுார் களத்துப்பொட்டல் பகுதியில் ஸ்டீபன்ராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. செல்லுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சென்றனர். அவர்களை கண்டதும் ஸ்டீபன்ராஜ் தப்ப முயன்றார். அவரை பிடிக்க முயன்ற எஸ்.ஐ., ரஞ்சித்தை கத்தியால் வெட்டியதில் இடது கையில் காயம் ஏற்பட்டது. தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சுட்டதில் ஸ்டீபன்ராஜ் வலது கால் மூட்டுக்கு கீழ் இரு தோட்டாக்கள் பாய்ந்தன. இதைதொடர்ந்து இருவரையும் சிகிச்சைக்காக போலீஸ் ஜீப்பில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.