இப்படியுமா தாக்குவார்கள்? இளம்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த உறவினர்கள்!
கடந்த ஒரே வாரத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண்கள் இருவர் மீது குடும்ப உறுப்பினர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பிபால்வா கிராமத்தில், ஆற்றங்கரையோரம் நின்று இரண்டு பழங்குடியின பெண்கள் தங்களது தாய்வழி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பிடிக்காத குடும்பத்தினர் இரு பெண்களையும் ஏன் அவர்களுடன் பேசினீர்கள் என்ற ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பெண்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இருவரையும் எட்டி உதைத்து, தடிகளால் அடித்து, கன்னங்களில் அறைந்து சித்திரவதை செய்துள்ளனர். அதில் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து சென்று அடிக்கிறார் ஒருவர். இந்த கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதில் இரு பெண்ணின் தாயும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சி . இதனை ஒருவர் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சுற்றி நிற்கும் ஒருவர் கூட அவர்களை தடுக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம். கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் , ஒரு பெண்ணின் தாய் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் , கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றால் தன்னைதான் திட்டுவார்கள் என அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பெண்ணின் மாமியார் மூலம் அறிந்த பெண்ணின் பெற்றோர் , உறவினர் வீட்டிற்கு சென்று தலை முடியை பிடித்து இழுத்து அடித்து அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின, இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே , காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு, பெண்ணின் தாய், சகோதரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த பெண்ணும் பழங்குடி பிரிவை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஒரே வாரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெண்களை துன்புறுத்தும் போக்கை கைவிட அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இளம்பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் - பதறவைக்கும் சம்பவம்!