(Source: ECI/ABP News/ABP Majha)
இளம்பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் - பதறவைக்கும் சம்பவம்!
இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப் பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்ததோடு, மரத்தில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு குடும்பத்தினரே கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவர் வீட்டிலிருந்து பெற்றோர் திட்டுவார்கள் என்ற காரணத்தினால் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் இளம்பெண். இத்தகவலையறிந்த பெண்ணின் குடும்பத்தார், அப்பெண்ணினை அங்கிருந்து அவரின் தலைமுடியினை இழுத்து வெளியே தள்ளியதோடு கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதோடு மட்டுமின்றி இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் அந்தப் பெண்ணின் தலைமுடியினை பிடித்துத் தரதரவென்று இழுந்து வந்ததோடு, மரத்தில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படி, மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட பெண்ணினை குச்சியால் கொடூரமாக தாக்க ஆரம்பத்துள்ளனர். இதோடு தாக்குதல் நடத்தியவர்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், அழுவதை நிறுத்துங்கள், இனி எப்பொழுதாவது இப்படி வருவாயா? என்று கூறிக்கொண்டே இரக்கமின்றி அடித்துள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த குச்சி உடையும் வரை அடிப்பதை அவர் நிறுத்தவில்லை. மேலும் மற்றொரு வீடியோவில், பொது வெளியில் இளம் பெண்ணை மரத்தில் கட்டித்தொங்கவிடப்பட்டதைக்கண்டு அனைவரும் சிரிப்பதைக் காணமுடிந்தது. ஆனால் சுற்றி நின்ற ஒருவர் கூட இளம்பெண்ணினை காப்பாற்ற முன்வரவில்லை என்பது தான் வேதனையான விஷயமாக இருந்தது.
இதனையடுத்து தகவலறிந்த போலீசார், குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்ட பழங்குடியின இளம்பெண்ணினை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயம் அடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் உயிருக்குப்போராடி வரும் நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டதை அலிராஜ்ப்பூர் மாவட்ட எஸ்.பி. உறுதி செய்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொர்பான வீடியோக்கள் அடிப்படையில் பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேப்போன்று மத்தியப் பிரதேச மாநிலம் குணா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின பெண் ஒருவர் தன் முன்னாள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் வேறு ஒரு ஆணை திருமணம் செய்துக கொண்டு புதிதாக வாழ்வைத் தொடங்கவிருந்த நிலையில் முன்னாள் கணவனின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் பெண்ணை இழுத்து சென்றுள்ளனர். அதோடு ஒரு ஆணைத் தோளில் ஏற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து துன்புறுத்தியோடு அவமானப் படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியேதோடு இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுமட்டுமில்லாமல் மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்கள் பல்வேறு வகைகளில் சமூகம் மற்றும் குடும்பத்தினரால் தாக்குதலுக்கு ஆளாவது வாடிக்கையாகிவருகிறது.
குறிப்பாக இன்றைய சமூகத்தில் பெண்கள் பலர் மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் இன்றும் நின்றபாடில்லை. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று தெரியாமலேயே பல பெண்கள் குடும்ப வன்முறைக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். அதிலும் எத்தனை வளர்ச்சியினை நாம் அடைந்தாலும் பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கை நிலை இன்னும் மாறவில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் இந்த தாக்குதல் சம்பவங்கள்