காதலை பிரித்த குடும்பம்.. பழிவாங்க குழந்தையை கடத்திய ஜோடி... நம்பி இறங்கி கம்பி எண்ணிய கதை!
காதலை பிரித்த குடும்பத்திற்கு பாடம் புகட்ட நினைத்த ஜோடியை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணங்களை பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்கும் போது ஒரு சில நேரங்களில் பெற்றோர்கள் அதை மறுத்தும் வருகின்றனர். அப்படி ஒரு பெண்ணின் காதல் திருமணத்தை மறுத்த குடும்பத்திற்கு சரியான பாடம் புகட்ட நினைத்த காதல் ஜோடி காவல்துறையிடம் சிக்கியுள்ளது. அவர்கள் காவல்துறையில் சிக்கும் வகையில் என்ன செய்தார்கள்?
மகாராஷ்டிரா மாநிலத்தின் பான்வெல் பகுதியில் ஷாலு(19) வயது பெண் வசித்து வருகிறார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் விபின் ஹரிலால்(21) என்ற நபருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். அந்த திருமணத்தை ஏற்க மறுத்த ஷாலுவின் குடும்பத்தினர் அவர்களை பிரித்துள்ளனர். அத்துடன் ஷாலுவை அவருடைய மாமா வீட்டில் சில மாதங்கள் தங்க வைத்துள்ளனர்.
அதன்பின்னரும் ஷாலு தன்னுடைய கணவரான விபின் உடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தங்கள் இருவரையும் பிரித்து வைத்த குடும்பத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஷாலு மற்றும் விபின் நினைத்துள்ளனர். இதற்காக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஷாலு தன்னுடைய மாமா வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அவர் வரும்போது அவருடைய உறவினரின் குழந்தையையும் உடன் அழைத்து வந்துள்ளார்.
அந்த குழந்தையை வைத்து விபின்-ஷாலு தங்களுடைய வாழ்க்கையை தொடங்க பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு சில நபர்களை வைத்து அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டு குழந்தையை விட வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும் காவல்துறைக்கு சென்றால் குழந்தை மற்றும் ஷாலு ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். ஷாலு மீது சந்தேகம் வராமல் இருக்க அவர்கள் அப்படி கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த தொலைப்பேசி அழைப்பிற்கு பின் குழந்தையின் பெற்றோர் நவி மும்பை காவல்துறையில் புகாரை அளித்துள்ளனர். இவர்களுக்கு வந்த தொலைப்பேசி அழைப்பை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இறுதியில் குழந்தையை வைத்து ஷாலு-விபின் தம்பதி பணம் பரிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்தை மொபைல் போன் உதவியுடன் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அங்குச் சென்று அந்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். அத்துடன் ஷாலு மற்றும் விபின் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதலை பிரித்த குடும்பத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த காதல் ஜோடி தற்போது கைதாகியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: காரில் நடன பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... கதறியதால் சுற்றி வளைத்த போலீஸ்... சென்னையில் அதிர்ச்சி!