ஒரே நாளில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை கொள்ளை - திண்டுக்கல் அருகே அதிர்ச்சி
திண்டுக்கல்லில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி-காந்தி நகரை சேர்ந்தவர் ஜோதி மணிகண்டன் (வயது 37). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முனீஸ்வரி (வயது 58). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார்.
அதேபோல் மகாலெட்சுமி நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) துணி வியாபாரி. இவர் குழந்தைகளின் படிப்பிற்காக திண்டுக்கல் அருகேயுள்ள வாழைக்காய்பட்டி பிரிவில் வசித்து வருகிறார். வாரம் ஒரு முறை கோபால்பட்டி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த மூன்று வீடுகளும் பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் என்பவரின் வீட்டில் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களையும், ஜோதிமணி என்பவர் வீட்டில் இரண்டு பவுன் மதிப்புள்ள தங்க நகையும், முனீஸ்வரி என்பவர் வீட்டில் அரை பவுன் தங்கத்தோடு ரூ.500 பணமும், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 56), விஜயகுமார் (வயது 70) இவர்கள் இருவரின் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றுள்ளனர்.
"அங்கேயும் விடியவில்லை, இங்கே விடியல் திரும்ப வருமா தெரியவில்லை” - தமிழிசை யாரை சொல்கிறார்?
நகை பணம் கொள்ளை போன வீட்டின் உரிமையாளர்களுக்கு காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வீட்டின் உரிமையாளர்களும் நேரில் வந்த பின்னர் தான் எவ்வளவு பணம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோபால்பட்டி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை பணம் கொள்ளையும், 2 வீடுகளில் பைக்குகளும் திருடு போன சம்பவம் அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.