பிரசவத்திற்கு பணமில்லை.! 3வயது மகனை விற்க கட்டாயப்படுத்தப்பட்ட அவலம்: களத்தில் இறங்கிய காவல்துறை..!
UP Child Sale: உத்தர பிரதேசத்தில் மனைவி பிரசவத்திற்கு மருத்துவமனையில் கட்டணம் செலுத்த முடியாததால் 3 வயது மகனை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் குசிநகரில் பர்வா பட்டியில் வசிக்கும் ஹரிஷ் படேல் என்பவர் தனது மனைவியை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார். இவருக்கு இது ஆறாவது குழந்தை என்றும் தகவல் தெரிவிக்கின்றன. உள்ளூர்வாசிகள் கூற்றுப்படி, ஹரிஷ் தினக்கூலி வேலை செய்து வருகிறார்.
வீட்டிற்கு மறுப்பு:
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் மருத்துவமனையில் கட்டணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் உடனடியாக மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால், தாயையும், பிறந்த குழந்தையையும் மருத்துவமனை ஊழியர்கள் வீட்டிற்குச் அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை, ஹரிஷ் தனது மூன்று வயது மகனை, விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மோசடியான தத்தெடுப்பு பத்திரத்தின் கீழ், 3 வயது மகனை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிரடி:
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாரணை களத்தில் இறங்கினர். காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில், இடைத்தரகர் அம்ரேஷ் யாதவ், தத்தெடுத்த பெற்றோர், போலி மருத்துவர் தாரா குஷ்வாஹா மற்றும் மருத்துவமனை உதவியாளர் சுகந்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்
இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ன்று எஸ்.பி சந்தோஷ் குமார் மிஸ்ரா கூறினார். இதையடுத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மருத்துவமனையில் மனைவி பிரசவத்திற்கு பணம் இல்லாத காரணத்தால், தனது குழந்தையை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Mpox: இந்தியாவில் குரங்கம்மை தொற்று சந்தேகம்.? மாநிலங்களுக்கு பறந்த மத்திய அரசின் உத்தரவு.!