(Source: ECI/ABP News/ABP Majha)
Kolar Truck Looted: லாரியை மறித்து வழிப்பறி: ரூ.6.50 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை!
இதேபோல், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சூளகிரி அருகே 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற கன்டெய்னர் லாரியை வழிமறித்து ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சினிமாவை போல நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ரெட்மீ தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, பெங்களூரு அருகே உள்ளா ஒசக்கோட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் குடோனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி புறப்பட்டுச் சென்றது. சுரேஷ் என்ற டிரைவர் அந்த லாரியை ஓட்டிச் சென்றார். அவருடன் கிளீனராக இளைஞர் ஒருவர் உடன் சென்றார். அந்த லாரி தமிழ்நாட்டை தாண்டி, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் தேவரசமுத்ரா பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் லாரி சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல், லாரியை வழிமறித்து நிறுத்தியது. காரில் இருந்து இறங்கிய அந்த கும்பலின் கைககளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்த டிரைவரும், கிளீனரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்தக் கும்பல் டிரைவர் சுரேஷையும், கிளீனரையும் தாக்கி கை, கால்களை கட்டி போட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அந்தக் கும்பல் லாரியில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்து மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். கொள்ளைப்போன செல்போன்களில் மதிப்பு ஆறரை கோடி ரூபாய் ஆகும். இதன்பின்னர், டிரைவரையும், கிளீனரையும் ஒரு மரத்தில் கட்டிபோட்டு விட்டு அந்த கும்பல் தங்களது காரில் தப்பிச் சென்றுவிட்டது. சினிமா பாணியில் எல்லாம் வேகமாக நடைபெற்றுள்ளது. நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த அந்தப் பகுதி மக்கள், மரத்தில் கட்டிப்போடப்பட்ட இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களை மீட்டனர். இதன் பின்னர், இருவரும் அங்குள்ள முல்பாகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சூளகிரி அருகே 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பைக்கு செல்போன்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரியை, ஒசூர் அருகே உள்ள மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து ஒரு கும்பல் செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லாரியில் கொண்டு செல்லும் செல்போன்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவது, லாரி ஓட்டுநர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுவதாக லாரி ஓட்டுநர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற