கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது
2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச வைஃபை மூலம் மின்னஞ்சல் அனுப்பி ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதேபோன்று மாமாங்கத்தில் உள்ள மற்றோரு தனியார் ஓட்டலுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டு ஓட்டல்களுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இரண்டு ஓட்டல்களுக்கும் ஒருநபர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோன்று கேரள மாநிலத்தில் உள்ள கேரள முதலமைச்சர் வீடு, தலைமைச் செயலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆராய்ந்ததில் இரும்பாலை அருகே உள்ள சிற்றூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவரது செல்போன் என்று தெரியவந்தது. கிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது செல்போன் திருட்டுப் போனதாக தெரிவித்துள்ளார். செல்போனை திருடி சென்ற நபர் இந்த மிரட்டல் விடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டிலில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பதும் அவர் பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிப்படை காவல்துறையினரால் பிரேம் ராஜ் நாயர் கைது செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், பின்னர் முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த கேரள காவல் துறையினர் சேலம் விரைந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம் ராஜ் நாயர் கேரளா அழைத்து சென்று விசாரணை செய்யும் முடிவு செய்துள்ளனர்.