கரூர்: குளித்தலை அருகே கிராமத்து வீட்டில் மருத்துவம் - போலி மருத்துவர் கைது
பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலணி பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தில் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பெரியசாமி என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் பெரியசாமி (50). இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார்.
பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலணி பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு இடையே கிளினிக்கை காலி செய்துவிட்டு தற்போது தனது வீட்டில் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவர் திவாகர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், மருத்துவ ஆய்வாளர் மாசேதுங், நங்கவரம் தெற்கு விஏஓ சசிகலா ஆகியோர் புரசம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.
இதில் அவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலி மருத்துவர் பெரியசாமியை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து பொருட்கள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை அரசு மருத்துவர் திவாகர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிந்த குளித்தலை போலீசார், குளித்தலை நடுவர் நீதிமன்றம் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
வீட்டை திறந்து வைத்து தூங்கியதால் 2 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் கொள்ளை.
கிருஷ்ணராயபுரம் பகுதியில் வீட்டை திறந்து வைத்து தூங்கியதில் 2 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பிச்சம்பட்டி பகுதி சேர்ந்தவர் நாகராஜன்(40). சென்ட்ரிங் வேலை செய்து வருகின்றார். இவர் மனைவி ரஞ்சிதாவும் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மஞ்சள் மேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டை திறந்த வைத்த வாரே வெளியே தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கே சாமி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தி பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகராஜன் நேற்று காலை எழுந்ததும் வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோக்கள் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடி போனது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்கள் குறித்து தேடி வருகின்றனர்..