ஒரே நாளில் இரண்டு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு - அரவக்குறிச்சியில் அதிர்ச்சி
கரூர் அரவக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வரும் சம்மனசு மேரி இவர் அரவக்குறிச்சி அருகே மோளையாண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கரூர் அரவக்குறிச்சியில் ஒரே நாளில் இரண்டு வீட்டில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மொத்தம் 65 சவரன் திருடு போனது. அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் அந்தோணி முத்து. மகன் ஜான் பிலிப்ஸ் பத்திர எழுத்தராக வேலை பார்த்து வருகின்றார். 09.12.23 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு செங்கல்பட்டில் உள்ள திருமணமான மூத்த மகளை பார்க்க குடும்பத்துடன் செங்கல்பட்டு சென்றுவிட்டார். ஊர் திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து நகைகள் 29 பவுன் மற்றும் நான்கு லட்ச ரூபாய் ரொக்கம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல அன்றே அருகிலுள்ள அரவக்குறிச்சி அம்மன் நகரில் வசித்து வரும் சம்மனசு மேரி வீட்டிலும் நகைகள் திருடுபோனது. இவர் அரவக்குறிச்சி அருகே மோளையாண்டி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 08.12.23ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த அவர் மகன் கடந்த 09.12.23 வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து ஊர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு நகைகள் 36 சவரன் காணாமல் போனதை பார்த்துவிட்டு கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அரவக்குறிச்சியில் ஒரே நாளில் அருகருகே உள்ள பகுதியில் இரண்டு வீட்டில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மொத்தம் 65 சவரன் திருடு போனது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரு குடும்பத்திலும் திருமணத்திற்காக நகை சேர்த்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆறு மாத காலமாக அரவக்குறிச்சியில் பல்வேறு பகுதியில் ஆடு, கோழி, இருசக்கர வாகனம், நகை உள்ளிட்ட பல்வேறு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் காலை, மாலை, இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அதேபோன்று முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.