தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்
காவலரை தகாத வார்த்தையில் பேசி அராஜகத்தின் உச்சத்தில் ஈடுபட்ட இருவரையும், போலீசார் அழைத்துச் சென்றனர்.
கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் உள்ளே நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் - கோவை சாலையில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் வளாகத்திலேயே உயர்ரக சைவ - அசைவ உணவகமும் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அதீத மதுபோதையில் உள்ளே நுழைந்து, உணவகத்தில் சாப்பிடுவதற்கு அசைவ உணவுகள் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சாப்பாடு தர மறுத்துள்ளனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதி ஊழியர்களை தரக்குறைவாக பேசியதால், கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் வெளியே அழைத்து வந்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரை இளைஞர்கள் தகாத வார்த்தையில் தரக்குறைவாக பேசியதோடு, சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அதை போலீசார் கண்டித்ததும், ஆத்திரமடைந்த இருவரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வாகனங்களை மறித்து அராஜகத்தின் உச்சத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, மேலும் சில காவலர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, தலைக்கேறிய மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்களையும், காவல்துறை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக கரூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒரு நபர் கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த விக்கி என்றும், அவர் சம்பந்தப்பட்ட தனியார் சொகுசு விடுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக கரூர் - கோவை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.