Crime: குளித்தலையில் மனைவியை கொலை செய்து தப்பிய கணவர் நீதிமன்றத்தில் சரண்
வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சத்யாவிடம் கணவர் செல்வராஜ் மீண்டும் சண்டையிட்டு உள்ளார். அப்போது, கத்தியை எடுத்து சத்தியாவின் வயிற்றில் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
கரூர் அருகே உள்ள திருமாநிலையூர் சேர்ந்தவர் சிவா என்கின்ற செல்வராஜ் (வயது 52). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா என்கிற சந்தியா (வயது 40). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி, தாந்தோணி மலை நகர் பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில், சிவா கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சத்யா சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சத்யா வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சத்யாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சிவா சற்று தொலைவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தனது மூத்த மகனிடம், நடந்த விபரத்தை கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் பதறி அடித்துக் கொண்டு சத்யாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தாய் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தான்தோன்றி மலை போலீசார், மருத்துவமனைக்கு வந்து சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தாந்தோணி மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கரூரில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி பிரகதீஸ்வரன், செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கரூரில் மனைவியை சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்த செல்வராஜ் மறுநாள் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.