இயற்கை உபாதைக்காக சென்ற சிறுமி ரயில் மோதி உயிரிழப்பு - கரூரில் சோகம்
சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் மோதியதில் பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கரூர்: மருதூரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி விரைவு ரயில் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது பள்ளி விடுமுறைக்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார். பள்ளி மாணவி கனிமொழி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் மோதியதில் பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்