Crime: அடிமாடுகள் கடத்தும் தோரணையில் கஞ்சா கடத்தல்; கரூரில் சிக்கிய கடத்தல் கும்பல்
தமிழகம் முழுவதும் கேரளாவிற்கு அடிமாடுகள் கடத்துவது போன்ற தோரணையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தலா? கரூரில் போலீசாரிடம் பிடிபட்ட மூன்று பேர் கொண்ட கும்பல்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோத இறைச்சி விற்பனைக்காக 20 மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியில், ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 42 கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி சட்டவிரோத செயல்கள் ஆன கஞ்சா, குட்கா, அயல் மாநில மதுபானங்கள் போன்றவற்றை சட்டவிரோதமாக கடத்தி வருவதை தடுக்கவும், வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எல்லை காவல் நிலையங்களில் தொடர்ந்து வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கரூர் ஊரக உட்கோட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய சரகம் பெரிய திருமங்கலம் பிரிவு ரோட்டில் அரவக்குறிச்சி வட்ட காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசாருடன் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. கேரளாவிற்கு வழக்கமாக செல்லும் வழித்தடத்தில் செல்லாமல் சந்தேகப்படும்படியாக கரூர் மாவட்டத்தின் வழியாக அங்கு வந்த வாகனத்தின் உள்ளே சோதனை செய்தபோது 2 வெள்ளை சாக்கில் சுமார் 42 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சாவை கடத்திச் சென்ற தேனி மாவட்டம், உத்தபாளையத்தைச் சேர்ந்த கௌதம் (27), ராம்குமார் (29), கரன்குமார் (23) ஆகிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இறைச்சி விற்பனைக்காக மாடுகளை கடத்துவது போன்ற தோரணையில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படியான சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபர்களை வாகன சோதனையில் திறம்பட செயல்பட்டு கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் சட்டவிரோதமான போதை பொருட்களை யாரேனும் கடத்தி வந்தாலோ, விற்பனை செய்வதாக தகவல் தெரிய வந்தாலோ உடனே கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைபேசி எண் 94 98 18 84 88 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.