லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!
கர்நாடகாவில் தனியார் பேருந்து விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு ஹைதராபாத்திற்கு புறப்பட்டுச் சென்றது. படுக்கை வசதிகளுடன் கூடிய அந்த பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்தனர்.
இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பேருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் கமலாபூர் தாலுகாவில் அமைந்துள்ள பிதார் – ஸ்ரீரங்கபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது. பயங்கர சத்தத்துடன் நடைபெற்ற இந்த விபத்தில் நிலைகுலைந்த பேருந்து பின்னர் அங்கே இருந்த பாலத்தில் மோதி அப்படியே நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில், சில பயணிகள் தப்பித்தாலும் சில பயணிகள் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். சிலர் விபத்தில் அடிபட்டவுடன் மயங்கினர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு முன்னரே பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பற்றி எரிந்து பேருந்து முழுவதையும் தீக்கிரைக்கியாக்கியது. இதில், பேருந்தின் உள்ளே சிக்கி 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனாலும், பேருந்து முழுவதும் கருகிவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டு கோவாவில் வசித்து வரும் அர்ஜூன்குமார் என்பவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அவரது நண்பர்களும், உறவினர்களும் இந்த பேருந்தில் சென்றுவிட்டு திரும்பியதாக தெரியவந்துள்ளது. பேருந்து விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்