Crime: சாப்பாடு போட மறுத்த மனைவி! கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!
கர்நாடகாவில் சாப்பாடு போடாமல் செல்போன் பேசிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் அமைந்துள்ளது ஷிமோகா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சிகாரிபுர் தாலுகாவில் அமைந்துள்ளது அம்பிகோலா கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ். இவரை மனு என்று அழைப்பார்கள். இவருக்கு வயது 32. மனு அப்பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவரது மனைவி கவுரம்மா. அவருக்கு வயது 28. கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
சாப்பாடு போட மறுத்த மனைவி:
கவுரம்மா தனது செல்போனை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், கணவன் மனுவிற்கும், மனைவி கவுரம்மாவிற்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மனு தனது கவுரம்மாவிடம் சாப்பாடு போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அப்போது, கவுரம்மா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
கவுரம்மாவிடம் மீண்டும் சாப்பாடு பரிமாறுமாறு கூறியுள்ளார். ஆனால், கவுரம்மா சாப்பாடு பரிமாறமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால், மனு ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனு தனது மனைவி கவுரம்மாவை தாக்கியுள்ளார்.
கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்:
மேலும், கோபத்தின் உச்சிக்கே சென்ற மனு தனது மனைவியின் கழுத்தை தனது தோளில் கிடந்த துண்டால் நெரித்துள்ளார். இதனால், கவுரம்மா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். கவுரம்மா – மனு சண்டையிடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சண்டையைத் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் தடுப்பதற்கு முன்பே கவுரம்மாவை மனு கொலை செய்துவிட்டார்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அதே கிராமத்தில் வசிக்கும் கவுரம்மாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், கொலை செய்த மனுவையும் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சாப்பாடு பரிமாறாத ஆத்திரத்தில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.