Crime: கன்னியாகுமரியில் மொட்டைமாடியில் ஒருவர் கொலை..! ஒருவர் கைது..! இருவர் சரண்.! காரணம் என்ன?
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் தக்கலை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை செய்யும் போது தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38). இவர் வெளிநாட்டில் பிளம்பராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மகேஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வரும் போது விமான நிலையத்தில் பழக்கமான சென்னையை சேர்ந்த சோபி என்பவரை கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் மனைவியை சென்னைக்கு அனுப்பி வைத்த மகேஷ் கடந்த ஞாயிற்றுகிழமை மதியம் வரை வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது மகேஷ் வீட்டு மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த தக்கலை காவல்துறையினர் மகேஷ் சடலத்தை கைப்பற்றினர். சனிக்கிழமை இரவு வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை செய்தவர்களை தேடி வந்த நிலையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று இரவு 11 மணியளவில் 2- மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது பதிவாகியிருந்தது தெரியவந்தது.. இதன் அடிப்படையில் திருவிதாங்கோடை சேர்ந்த மெக்கானிக் பெனிட் கிளேஸ் (29), இவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பிபின் ஜேக்கப் (23), திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த டெறன்ஸ் (21) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாகியிருந்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிபின் ஜேக்கப் என்பவரை, இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் பள்ளியாடி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிபின் ஜேக்கப்பை பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பெனிட் கிளேஸ் மற்றும் அவரது உறவினரான டெறன்ஸ் ஆகியோரை பிடித்தால் தான் முன்விரோதத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்பதால் அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த இருவரும் பத்மநாபபுரம் கோர்டில் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பிரவின் ஜீவா, சரணடைந்த இருவரையும் 15 நாள்கள் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரையும் போலீஸ் அழைத்து சென்று நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் தக்கலை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை செய்யும் போது தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.