காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக வேட்பாளர் தற்கொலை - காரணம் என்ன?
தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் , வளத்தீஸ்வரன் கோவில் கோவில் பகுதியைச் சேர்ந்தவர், வேணுகோபால் என்பவருடைய மகன் ஜானகிராமன் (36). இவருக்கு இளைய சகோதரன் ஒருவர் உள்ளார் , இன்னும் திருமணம் ஆகவில்லை . இவர் அப்பகுதியில் அதிமுக வின் தீவிர ஆதரவாளராகவும் அதிமுகவின் பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்த ஜானகிராமன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தான் போட்டியிடும் வார்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மாற்றுக் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களிடம் தனக்கு ஆதரவை பெருக்கி வந்துள்ளார். அவருக்கு மாற்று கட்சியை சேர்ந்த சிலரும் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஜானகிராமன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்த்து போட்டியிடும் யாராவது இவரை மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா, தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா , தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா, என்ற கோணத்தில் தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















