Kanchipuram: கஞ்சா நகரமாக மாறும் காஞ்சி ? - தொடரும் கஞ்சா வியாபாரிகளின் கைது..!
காஞ்சிபுரத்தில் இரண்டு வாலிபர்களிடமிருந்து சுமார் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இரண்டு வாலிபர்களிடமிருந்து சுமார் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கோயில் நகரமா கஞ்சா நகரமா ?
கோயில் நகரமாக இருக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் உள்ளன. காஞ்சிபுரம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா எளிதாக கிடைத்து வருகிறது. என்னதான் அவப்பொழுது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்து விடவும் முடியாது.
பரவிய கஞ்சா என்ற அரக்கன்
பொதுவாகவே புறநகர் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விற்பனை செய்யப்பட்டு வந்த கஞ்சா சமீப காலமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில், கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கோயில்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கூலி தொழிலாளிகள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளிலும் , இலக்கு வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகின்றது. சமீபத்தில் கூட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்திருந்தனர். திருட்டுத் தொழிலில் சிரமம் இருப்பதால் கஞ்சாவிற்கு வந்திருப்பதாக அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருந்தார். அதற்குள் காஞ்சிபுரம் மாநகரில் மற்றொரு கஞ்சா விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு ஒலிமுகமது பேட்டை பகுதியில் காஞ்சிபுரம் வேலூர் செல்லுகின்ற மாநில நெடுஞ்சாலையில் அஸத்துல்லா என்பவரின் மகன் முஸ்தப்பா (வயது 26) என்பவர், அந்தப் பகுதியில், அப்பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட இளைஞர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களை மையப்படுத்தி கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, கஞ்சா புகைக்கும் நபர்கள் போல காவல்துறையினர் செயல்பட்டு, ஒலி முகமது பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்கின்ற முஸ்தப்பா என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவருடைய வீட்டில் சென்று பீரோ உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர் .
கஞ்சா வாங்க ஆந்திரா பயணம்
அதில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்ததில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விநாயகபுரம் பகுதியை சேர்ந்த நலீம் கான் என்பவருடன் சேர்ந்து ஆந்திர மாநிலம் ஓ.ஜி . குப்பம் பகுதிக்கு சென்று 2 கிலோ 400 கிராம் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பேக்கட்டுகளாக பேக் செய்து அப்பள தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வாங்கி வந்த கஞ்சாவில் பாதி என்னுடைய வீட்டிலும் மீதம் நலீன் கான் என்பவர் வீட்டிலும் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு
முஸ்தப்பா கொடுத்த தகவலின் பெயரில் பாலு செட்டி சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட விநாயகபுரம் பச்சையம்மன் கோயில் தெருவில் நலீம் கான் (வயது 25) என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவையும், முஸ்தப்பா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் சேர்த்து மொத்தம் 2 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களுக்கு எழும் கேள்வி ?
இளைஞர்களுக்கு எங்கெங்கு கஞ்சா விற்கிறது என்ற தகவல் தெரியும் பொழுது, கண்காணிக்க வேண்டிய காவலர்களுக்கு ஏன் அது குறித்த தகவல்கள் கிடைப்பதில்லை. ஒருவேளை காவல்துறையினரின் ஆசியுடன் இந்த கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் எழுப்புகின்றனர். விரைவில் காஞ்சிபுரம் நகரில் கிடைக்கும் கஞ்சா விற்பனைக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.