பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
" தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு "
பெற்றோர்கள் கண்டித்ததால் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) ; காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆரம்பாக்கம் ஆதிபராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 39). இவரது மனைவி மீனா (வயது 36). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் மகன் தோனி (12 - வயது) படப்பை அருகே உள்ள ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ரேஷன் கடைக்கு சென்று
இந்தநிலையில் தோனி சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நேற்று பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் பெற்றோர் அவனை கண்டித்ததோடு இன்று ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக்கொள், ஆனால் நாளை முதல் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும் என அறிவுரை கூறியதோடு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வை எனக்கூறி காசு கொடுத்து விட்டு இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர்.
பெட்ரோல் பங்கில்
உடனடியாக ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வீட்டில் வைத்துவிட்டு மீதி இருந்த காசை எடுத்துக் கொண்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படப்பை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்கிவிட்டு, வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள கழிவறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறி அடித்தபடி கழிவறையில் இருந்து வெளியே வந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் போர்வையால் மூடி அவரை மீட்டனர், இருப்பினும் 90% தீக்காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சரியாக படிக்கவில்லை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என்பதால் பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பெட்ரோல் பங்கில் சிறுவனுக்கு எப்படி பெட்ரோல் கொடுத்தார்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)