தமிழகத்தில் முதல்முறையாக, கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் மீது பாய்ந்தது குண்டாஸ்
கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதான 2 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்ப்பாடி கிராமத்தில் மதுரை மாவட்டம் மேலூர் ஆலம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி முத்துக்குமாரி (40) என்பவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (25) என்பவருக்கு கருக்கலைப்பு செய்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரி மற்றும் இவரது உதவியாளர் அ.பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மனைவி கவிதா(35) ஆகிய இருவரையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முத்துக்குமாரி, கவிதா ஆகியோர் தொடர் குற்ற செயலில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கடலூர் சிறையில் இருந்த முத்துக்குமாரி, கவிதா ஆகியோரை குண்டர் தடு்ப்பு சட்டத்தில் ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்து வேலூர் மகளிர் சிறையில் அடைத்தனர். கருக்கலைப்பு செய்த வழக்கில் கைதான 2 பெண்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை.
குண்டர் தடுப்புச் சட்டம் என்றால் என்ன?
சட்டவிரோத மது தயாரிப்பாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்டவிரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் தடுப்புச் சட்டம். சுருக்கமாக, வன்முறையாளர் தடுப்புச் சட்டம். இந்த வன்முறையாளர்களை குண்டர்கள் என்று எளிமையாகச் சொல்லி, 'குண்டர் சட்டம்' என்றே இந்தச் சட்டம் அழைக்கப்படுகிறது. 2006-ஆம் ஆண்டில் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மேற்கூறிய குற்றம் (சட்டப் பிரிவுகள் 16, 17, 22, 45) எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள். இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்