ஆட்டை ஆட்டையை போட்ட இளைஞர்கள்: சேஸிங் செய்து மடக்கிய போலீஸ்!
ஜவ்வாதுமலையில் மோட்டார் பைக்கில் ஆடு கடத்திய 3 பேர் கொண்ட கும்பலை சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து மூன்று நபர்களை கைதுசெய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்துர் பாக்குமுடையானுர் பகுதியை சேர்ந்தவர் சின்னபையன் மனைவி மல்லிகா வயது (50), இவர் ஜமுனாமரத்துர் ஆலங்காயம் மலைச்சாலையில் தனக்கு சொந்தமான வெள்ளாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள், சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்தது இந்த மர்ம நபர்கள் கீழே இறங்கி அக்கம் பக்கம் யாராவது உள்ளார்களா என்று பார்த்து விட்டு திடிரென மேய்ந்துக் கொண்டிருந்த 1 வெள்ளாட்டை தூக்கி அவர்களுடைய மோட்டார்பைக்கில் கடத்தி கொண்டு சென்றனர். இதனை பார்த்த மல்லிகா கத்தி கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார்பைக்கில் வந்தவரிடம் உதவி கேட்டு அவருடைய தொலைபேசி மூலம் ஜமுனாமரத்துர் காவல்நிலையத்தில் தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த உடனே ஜமுனாமரத்தூர் சப் இன்ஸ்பெக்டர்கள் ம.முருகன், க.குபேந்திரன் தனிப்பிரிவு ஏட்டு பா.விஜய் மற்றும் காவலர்கள் காவல்துறை வாகனத்தில் சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் ஆடுகடத்தலில் ஈடுப்பட்டவர்களை விரட்டி சென்று திருப்பத்துர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள வனசோதனை சாவடி அருகில் மடக்கி பிடித்து வெள்ளாட்டை மீட்டனர். மேலும் 3 நபர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மீட்ட வெள்ளாட்டை காவல்துறையினர் மல்லிகாவிடம் ஒப்படைத்தனர். ஆடு கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்களை விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் கோமூட்டேரி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை வயது (26) மேல்நெல்லிமரத்துர் கிராமத்தை சேர்ந்த கோபி வயது (20) மந்தாரைகுட்டை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி வயது (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 நபர்களும் பல்வேறு இடங்களில் இது போன்று ஆடு திருடி சென்று அதனை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை 3 நபர்களும் பங்கு போட்டு கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 3 நபர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடு திருடி சென்ற உடனே தகவல் அளித்ததும் விரட்டி சென்று திருடர்களை பிடித்த ஜமுனாமரத்தூர் காவல்துறையினரை மலைவாழ் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்