(Source: ECI/ABP News/ABP Majha)
Crime : ரூ. 41 லட்சம் முறைகேடு..! அரசு செட்டாப் பாக்ஸ்க்கு பதில் தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களுக்கு பதில் தனியார் நிறுவன செட்-டாப் பாக்ஸ்களை சப்ளை செய்து 41 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 230 அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ் செல் வழங்கி மோசடி செய்த வழக்கை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றவியல் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தனி தாசில்தார் ரமேஷ்குமார் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச செட்டாப்பாக்ஸ்களை வழங்கியுள்ளது. அவற்றின் மூலம் மிகக்குறைந்த மாத சந்தா கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் உரிமம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களான கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தாலுகாவில் உள்ள 14 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திடம் இருந்து கடந்த 20-9-2017 முதல் கடந்த மாதம் வரை ரூபாய் 1725.25 மதிப்புள்ள செட்டாப்பாக்ஸ்க்கு ரூபாய் 180 வீதம் வைப்பு தொகை செலுத்தி ரூபாய் 41 லட்சத்து 6 ஆயிரத்து 95 மதிப்புள்ள 2 ஆயிரத்து 380 அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பெற்று கொண்டனர்.
இந்த செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்குமாறு கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அரசு செட்டாப்பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்காமல் அதற்கு பதிலாக தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை வழங்கியுள்ளனர்.மேலும் அரசு செட்டாப்பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் அரசு கேபிள் டி வி நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்து தனியார் நிறுவன செட்டாப்பாக்ஸ்களை பயன்படுத்த செய்து அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு அரசு கேபிள் டிவி நிறுவன சேவையை வழங்காமல் தடுத்து ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் போில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணையில் கனகா பாடி சோமாஸ்பாடி சேத்துப்பட்டு பொறக்குறவாடி நாயுடு மங்கலம் படுகா சாத்தூர் கீழ்புதுப்பாக்கம் ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட பல ஊர்களில் செட்டாப் பாக்ஸ் மோசடி நடந்தது உறுதி ஆகி உள்ளது. இது தொடர்பாக, செட்டாப் பாக்ஸ் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 14 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.