(Source: ECI/ABP News/ABP Majha)
மனைவி, குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிய நபருக்கு வலைவீச்சு.. அவசர எண்ணுக்கு அழைத்ததால் மீட்கப்பட்ட பெண்..
குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த கவிதா என்ன செய்வது? என்று திகைத்து இருந்த நிலையில்தான், அவசர போலீஸ் 100க்கு போன் செய்து நடந்த விஷயத்தைத்தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்டப் பிரச்சனையினால் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்து நான்கு நாள்களாகப் பூட்டி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் பேரில் திருவாடானை போலீசார், பூட்டப்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர்.
இன்றைய சூழலில் குடும்ப வன்முறையினால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறிவருகிறது. குறிப்பாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் யாராவது கொலைச் செய்யப்படும் நிலை கூட ஏற்படுகிறது. இதுப்போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதும் இன்னமும் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகள் நின்றபாடில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும்தான் என்பதை சமூகம் முற்றாக உணரவேண்டும். குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு சம்பவம் தான் இராமநாதரபுரம் மாவட்டம் திருவாடனையில் அரங்கேறியுள்ளது. திருவாடானை தொண்டிகாந்தி தெருவில் வசித்துவருகிறார் செல்லக்கனி என்பவர். இவருக்குக் கவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே சில நாள்களாகப் பிரச்சனை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், தன்னுடைய மனைவி கவிதா மற்றும் இரண்டு குழந்தைகளை வீட்டின் உள்ளேயே பூட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
கோபத்தில் சென்ற கணவர் திரும்பி வந்துவிடுவார் என்று நினைப்பில் இருந்துவந்துள்ளார் கவிதா. ஆனால் ஒரு நாள் அல்ல இரண்டு நாட்கள் அல்ல தொடர்ந்து நான்கு நாள்களாகியும் அந்த நபர் வீட்டுக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த கவிதா என்ன செய்வது? என்று திகைத்து இருந்த நிலையில் தான், அவசர போலீஸ் 100-க்கு போன் செய்து நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட கவிதா என்ற பெண், கொடுத்த தகவலையடுத்து, திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து வந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து கவிதா மற்றும் அவருடைய குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து என்ன நடந்தது? என விசாரணைச் செய்த போலீசார் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளை மனரீதியாக தொந்தரவு செய்ததோடு, தலைமறைவாக உள்ள கணவர் செல்லக்கனி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பத்தோடு வெளியூர்தான் சென்றிருப்பார்கள் தான் நினைத்தோம், ஆனால் இப்படி வீட்டிற்குள் சிக்கித்தவித்து வந்துள்ளார்கள் என்பதை நாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என அவரது உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டார்கள் தெரிவித்தனர்.