Crime: கழுத்தை நெரித்துக் கொன்றேன்.. வெளிநாட்டில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்ற கணவர் ஒப்புதல்.. பதைபதைக்கும் வாக்குமூலம்
வெளிநாடு வாழ் இந்தியரான அஞ்சு அசோக் (வயது 35) மற்றும் அவரது மகள்கள் ஜீவா (வயது 6), ஜான்வி (வயது 4) ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் பணியாற்றி வந்த இந்திய செவிலியர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், செவிலியரின் கணவர் நீதிமன்ற விசாரணையில் தான் தான் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.
சென்ற டிசம்பர் மாதம் இங்கிலாந்து, கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் வாழ்ந்து வந்த வெளிநாடு வாழ் இந்தியரான அஞ்சு அசோக் (வயது 35) மற்றும் அவரது மகள்கள் ஜீவா (வயது 6), ஜான்வி (வயது 4) ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் ,கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவரான அஞ்சு, 2021ஆம் ஆண்டு முதல் கெட்டரிங் பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அங்கு தங்கி பணியாற்றி வந்த அஞ்சு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அஞ்சு ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், சிறுமிகள் ஜீவா, ஜான்வி இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.
அங்குள்ள லெய்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் நடந்த தடயவியல் உடற்கூராய்வில், மூவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரழந்தது தெரிய வந்தது. இந்நிலையில், முன்னதாக நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் ஆஜரான சஜூ செலவலேல் அங்கு தன் மனைவி அஞ்சு அசோக், குழந்தைகள் ஜீவா சாஜூ , ஜான்வி சாஜூ ஆகியோரை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 3ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு பற்றி நார்தம்ப்டன்ஷைர் காவல்துறையின் மூத்த புலனாய்வு அதிகாரியும் டிடெக்டிவ் காவல் ஆய்வாளருமான சைமன் பார்ன்ஸ் கூறியதாவது:
"இது முற்றிலும் கவலை நிரம்பிய வழக்கு, அஞ்சு, ஜீவா மற்றும் ஜான்வி ஆகியோரின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து சஜூ செலவலேல் ஏற்படுத்திய பேரழிவை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அஞ்சுவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விசாரணையின் வலியிலிருந்து சஜூ காப்பாற்றியுள்ளதற்கு மகிழ்கிறேன். அஞ்சு ஒரு அர்ப்பணிப்புள்ள செவிலியர், அன்பான தாய் மற்றும் விசுவாசமான நண்பர்.
சஜூ தான் செய்த செயல்களை எண்ணி இறுதிவரை வாழ வேண்டும், அவருடைய செயல்கள் ஏற்படுத்திய வலியை ஒரு நாள் அவர் உண்மையிலேயே புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். இது பலரைப் பாதித்த ஒரு வழக்கு, சஜூ செலவலேல் இவ்வளவு விரைவாக நீதியின் முன் நிறுத்தப்பட்டதற்கு காவல் துறையினரின் முழு அர்ப்பணிப்பு தான் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.