திருத்தணியில் சிறுவர்கள் கொடூர செயல்: ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரீதம்...அரசு எச்சரிக்கை...
திருத்தணி தாக்குதல் சம்பவம்: 4 சிறுவர்கள் பிடிபட்டனர்; வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அரசு வேண்டுகோள்

சென்னை: திருத்தணி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக இச்செயலில் ஈடுபட்ட 4 சிறுவர்களைக் காவல்துறையினர் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தவறான தகவல்களையோ அல்லது வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனத் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிர்ச்சி சம்பவம்
கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில்வே குடியிருப்புப் பகுதிக்கு அருகே வெளிமாநில நபர் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் இது குறித்துத் திருத்தணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. காயமடைந்த நபருக்குத் தேவையான மருத்துவ உதவிகளும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் காவல்துறையினரால் வழங்கப்பட்டன.
ரீல்ஸ் மோகத்தால் விளைந்த விபரீதம்
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின்படி, இன்ஸ்டாகிராம் (Instagram Reels) தளத்தில் பதிவேற்றம் செய்து பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், சட்டத்திற்கு முரண்பட்ட 4 இளஞ்சிறார்கள் (Children in Conflict with Law - CICL) திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், டிசம்பர் 28-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் நான்கு பேரையும் இளையர் நீதிக்குழு (Juvenile Justice Board - JJB) முன்பாக ஆஜர்படுத்தினர்.
இதில் மூன்று சிறுவர்கள் செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு (Place of Safety) அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சிறுவனுக்கு மட்டும் இளையர் நீதிக்குழுவால் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் மீது சட்டப்படி தகுந்த மற்றும் உடனடியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்
இந்தத் தனியொரு சம்பவத்தைத் தவிர, சமீபகாலமாகப் பிற மாநில நபர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், இணக்கமான சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
*காவல் ரோந்து: பிற மாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை வளாகங்களில் காவல் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
*ஆலோசனைக் கூட்டங்கள்: தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காவல்துறையினர் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காணப்படுகிறது.
*தீவிர கண்காணிப்பு: எதிர்காலத்தில் இது போன்ற தேவையற்ற அசம்பாவிதங்கள் மற்றும் தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யக் கடுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சம்பந்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இச்சம்பவத்தின் உணர்வுபூர்வமான தன்மையைக் கருத்தில் கொண்டு, பொது அமைதிக்கும் ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அந்த வீடியோக்களைப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு முழு உறுதியுடன் இருப்பதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















