ஆசிரியைகள் மீது கல்லெறிந்து சண்டையிட்ட தலைமை ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேசத்தின் பேரல்லி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் ஆசிரியைகள் மீது கல் எறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பேரல்லி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் ஆசிரியைகள் மீது கல் எறிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பேரல்லி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் பகுதியில் இருக்கும் சைத்பூர் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் குர்ஷித் அலி. சமீபத்தில் பெண் ஆசிரியைகளை ரகசியமாக வீடியோ எடுத்ததாக தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி மீது புகார் எழுந்துள்ளது. எனினும், தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி, சில பெண் ஆசிரியைகள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தாமல், தங்கள் லேப்டாப்களைப் பயன்படுத்தி வந்ததாக அவர் புகார் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளிடம் சான்றாக வழங்குவதற்காக ரகசியமாக வீடியோ எடுத்ததாக தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி தெரிவித்துள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஆசிரியைகள் தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி தங்களை ரகசியமாக வீடியோ எடுத்த போது அதனைக் கண்டுபிடித்து எதிர்த்ததால், அவர் கோபடைந்துள்ளார். தொடர்ந்து, ஆசிரியைகளைத் திட்டி, அவர்களிடம் சண்டையிட்ட தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி அவர்கள் மீது கற்களை எரிந்துள்ளார். மேலும், அவர்களின் மொபைல் ஃபோன்களையும் கைப்பற்ற முயன்றுள்ளார்.
இந்த மொத்த சம்பவமும் பள்ளிக் குழந்தைகளின் கண் முன்னே நடைபெற்றுள்ளது. தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறி, கல் எரிவது வரை சென்றவுடன், பள்ளிக் குழந்தைகளுள் பெரும்பாலானோர் பயந்து தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி மீது பள்ளியின் ஆண், பெண் ஆசிரியர்கள் இணைந்து, வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தொடக்க கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் குர்ஷித் அலியைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாகப் பதிவாகியுள்ள நிலையில், அது தற்போது வட இந்தியாவில் வைரலாகி பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்