ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் திருப்பம் - உடலில் இருந்து துப்பாக்கி தோட்டா கண்டுபிடிப்பு
’’சிகிச்சை பெற்ற ராமின் உடலில் இருந்து துப்பாக்கி தோட்ட எடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த துளசிதாஸ் உடலிலும் துப்பாக்கி குண்டு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது’’
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையில் வாரணாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் என்பவரும், நத்தாநல்லூர் பகுதியைச் சார்ந்த ராம் என்பவரும் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி இரவு 9 மணி அளவில் விற்பனையாளர்கள் இருவரும் அரசு மதுபானக் கடையில் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளனர்.
இந்நிலையில் அரசு மதுபானக்கடை பின்புறம் உள்ள மது அருந்தும் கூடத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் துளசிதாஸ், ராம் ஆகிய இருவரிடமும் மதுபான கடையின் விற்பனை பணத்தை கேட்டு மிரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மற்றொரு பணியாளரான ராம் காயப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வந்த ஒரகடம் போலீசார் காயத்துடன் இருந்த ராமை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த துளசிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திடீர் திருப்பம்
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விற்பனையாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம் உடலில் காயப்பட்ட இடத்தில் தொடர்ந்து வலி அதிகமாகவே ஸ்கேன் செய்து சோதனை மேற்கொண்டதில் துப்பாக்கி குண்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ராம் உடலில் இருந்து துப்பாக்கி குண்டை அகற்றி உள்ளனர். துப்பாக்கி குண்டை அகற்றிய நிலையில் ராம் தற்போது நலமுடன் உள்ளார்.
அரசு மதுபானக்கடை விற்பனையாளர்களை காயப்படுத்தி கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழந்த துளசிதாஸ் உடலிலும் துப்பாக்கி குண்டு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிந்து வரும் நிலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியிலும் பீதியையும், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்க பட்டிருப்பதால் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.