Crime : குஜராத்தில் பயங்கரம்... பலிபீடத்தில் உருண்ட தலைகள்... நரபலி கொடுத்துக் கொண்ட தம்பதி.....!
குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பவம் அங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்று நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
நரபலி
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில், கடந்த ஓராண்டாக தங்கள் வசிக்கும் வீட்டிலேயே நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோமகுண்டம் பூஜை செய்து, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நேரத்தில் இவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
தலையை துண்டித்த தம்பதி
அதன்படி, "மூடநம்பிக்கை உள்ள இவர்கள் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே சில பூஜைகளை செய்து வந்துள்ளனர். கில்லட்டின் (guillotin) போன்ற தலையை துண்டிக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் மாந்திரீக பூஜைகளை நடத்தி அந்த கருவியைக் கயிற்றின் மூலம் கட்டி இருவரும் தங்களைத் தாங்களே நரபலி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டவுடன் அது உருண்டு நேராக பலி பீடத்துக்கு செல்லும் வகையில் அந்த எந்திரத்தை அமைத்து தலையை துண்டித்துள்ளனர்” என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பாத்துக் கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: 2ம் கட்ட விசாரணையை துவக்கிய அமுதா ஐஏஎஸ் - 5 பேர் ஆஜராகி விளக்கம்





















