பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!
தான் தொல்லை தந்தது போதாதென்று, பல இடங்களுக்கு பேத்திகளை அழைத்துச் சென்று பாலியல் தொல்லைகள் தந்துள்ளார் தாத்தா.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது கழனிவாசல். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். 60 வயதான அவருக்கு சீமா என்ற மகள் உண்டு. சீமாவிற்கு 11 வயதிலும், 13 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுக்கு முன் சீமாவின் கணவர் இறந்து விட்டார். இதனால், செல்வத்தின் மகளான சீமா, வேறு ஒரு நபரை மறுமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீமா தனது இரண்டாவது கணவருடன் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார்.

இதனால், மகளின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள் இருவரும் தாத்தா செல்வத்தின் பராமரிப்பில் தற்போது வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சிறுமிகள் இவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது தாயான சீமாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, தாத்தா செல்வம் இருவருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக கூறி தாயிடம் அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய் சீமா உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு மைய தொடர்பு எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார் அவர்கள் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்தி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அந்த சிறுமிகளின் தாத்தா செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சுரேஷ், மணி, மற்றும் தெரசாள் புனிதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளி எஸ்.டி.ரவிக்குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் எந்த வித தகவலையும் தெரிவிக்க மறுத்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ், ஆசிரியர் கெவிராஜ், தனியார் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகள், மாணவிகள் என பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்த குற்றங்களை ஒடுக்க கடுமையான தண்டனைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும், இது போன்ற குற்றங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.





















